Action with a heart Headline Animator

Tuesday, August 24, 2010

விசேட தூதுவரை அனுப்புவது குறித்து கொழும்புக்கு டில்லி அறிவிக்கவில்லை

பசில் தலைமையில் தூதுக்குழு இந்தியாவுக்கு இன்று பயணம்

இந்திய பிரதமரின் விசேட தூதுவரது விஜயம் தொடர்பாக புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவித்த அரசாங்கம்,இதேவேளை இலங்கையின் மூவரடங்கிய தூதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது.நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெற்றோலிய,பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் இவ்வாரத்தில் கொழும்பு வரவிருப்பதாகவும் அதிகாரி மட்டத்தில் ஒருவர் அனுப்பப்படலாமென முன்னர் கூறப்பட்டாலும் இப்போது அரசியல் மட்டத்திலான ஒருவரே அனுப்பப்படலாமெனவும் அதில் சிதம்பரம்,பாலு ஆகிய இருவரது பெயர்களும் அடிபடுவதாக வார இறுதிப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருப்பதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியதாவது;
இந்தியப் பிரதமர் தனது விசேட தூதுவரை அனுப்ப விருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் அறிவித்திருப்பது மட்டுமே எமக்குத் தெரியும்.யார் அனுப்பப்படுகின்றார். எப்போது அவர் வருவார் என்பது பற்றிய எந்த விபரமும் புதுடில்லியிடமிருந்து எமக்கு உத்தியோக பூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நல்லுறவு வலுவான நிலையிலேயே காணப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமீபத்தில் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின் காரணமாக வடபகுதி அபிவிருத்தித் திட்டத்துக்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க வாய்ப்பேற்பட்டது. இரு நாடுகளுக்குயிடையிலான இராஜதந்திர உறவுப் பலமாக இருப்பதனால் இரு தரப்புச் செயற்பாடுகளும் ஆரோக்கியமானதாகவே அமையலாம்.
இந்திய பிரதமரின் விசேட தூதுவர் எப்போது வந்தாலும் அவரை வரவேற்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.அவருக்கு வடக்கு, கிழக்கு உட்பட எங்கு வேண்டுமானாலும் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் சுதந்திரமாக சென்று வர இடமளிக்கப்படும்.
இதேவேளை, இலங்கையின் அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அரச உயர்மட்டத் தூதுக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி புறப்படவிருக்கின்றது.இக்குழுவில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் உள்ளடங்கி இருக்கின்றனர் எனவும் அமைச்சர் சுசில் பிரமே ஜயந்த தெரிவித்தார்.(Thinakural)

No comments: