Action with a heart Headline Animator

Wednesday, August 25, 2010

ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம் வாராந்தம் நடமாடும் சேவை நடத்த முடிவு

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிரு க்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களினதும் 31 கனரக வாகனங்களினதும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடமாடும் சேவை நடத்தப்பட்டபோதிலும், சுமார் நூறு பேர் அளவில் மாத்திரமே நேரடியாக வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வாகனங்களின் அடிச்சட்டக இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பவற்றைப் பரீட்சித்து அவற்றைக் கணினித் தரவுகளுடன் ஒப்பிட்டு உரிமையாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் உரிமையை உறுதிப்படுத்தி வாகனங்களைப் பெற்றுச் செல்ல முடியுமென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
வாகனங்களை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்யுமுகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடமாடும் சேவைகளையும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர், இந்தப் பணிக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களைத் தவிர்த்து அடுத்த வார இறுதி நாட்களில் நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. இதேவேளை, கொள்வனவின் பின்னர் முறையாகப் பதிவு செய்யப்படாத வாகனங்கள், உரிமை மாற்றத்தின் பின்னர் ஆவணங்களைச் சரியாக மாற்றாதிருக்கும் வாகனங்கள், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை ‘கைவிடப்பட்ட வாகனங்கள்’ என வகைப்படுத்தி, சட்டச் சிக்கல்களைத் தீர்த்துக் கையளிப்பதுடன், உரிய ஆவண ங்களைத் தொலைத்தவர்கள் தொடர்பிலும் முறையான வழிமுறைகள் கையாளப்படும் என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களைத் தவிரவும் இன்னமும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களும் கனரக வாகனங்களும் அடையாளம் காணப்படவுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்த பிற மாவட்டங்களிலிருந்தும் வாகனப் பரிசோதகர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். (Thinakaran)

No comments: