Action with a heart Headline Animator

Thursday, August 26, 2010

தமிழர்களின் நிலைவரத்தை ஆராய மாத இறுதியில் இலங்கை செல்வேன்

அதற்கு முன் சிரேஷ்ட அதிகாரி பயணமாவார்; இந்திய பாரளுமன்றில் கிருஷ்ணா அறிவிப்பு

புதுடில்லி: இலங்கைத் தமிழர்களினதும் இடம்பெயர்ந்த மக்களினதும் நிலைவரத்தை நேரில் ஆராய்வதற்காக இந்தமாத இறுதியில் இலங்கைக்கு தான் பயணம் மேற்கொள்ள விருப்பதாகவும் அதற்கு முன்னர் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்புக்குச் செல்வாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார்.
இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் (லோகசபா) நேற்று இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே கிருஷ்ணா இதனைத் தெரிவித்தார்.இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பல எம்.பி.க்கள் இந்திய உதவியானது இடம்பெயர்ந்த தமிழ் மக்களைச் சென்றடையவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நிலைவரத்தை காலத்துக்குக் காலம் மதிப்பீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இந்தியா அனுப்பிய உதவிகளை பயனாளிகள் பெற்றுக்கொள்கின்றனரா என்பது தொடர்பாக சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. உதவிகளை அனுப்புவது தொடர்பாக அகதிகள் விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் குழுவான சர்வதேச செஞ்சிலுவைக் குழுவில் நாம் அதிகளவுக்குத் தங்கியிருக்கிறோம். காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளின் மூலம் தொடர்ந்து நாம் கண்காணித்து வருகிறோம் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.
அதேசமயம் இலங்கைத் தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு சர்வகட்சி பாராளுமன்றத் தூதுக்குழுவை அனுப்பவேண்டுமென அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை விடுத்த வலியுறுத்தலை கிருஷ்ணா நிராகரித்துள்ளார்."அதற்கான காலம் கனிந்துள்ளதாக நான் நினைக்கவில்லை%27 என்று அவர் கூறியதாக டி.என்.ஏ.செய்திச் சேவை தெரிவித்தது.
இந்த விவகாரத்தின் போது தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.அவற்றுக்குப் பதிலளித்த கிருஷ்ணா, இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட தீர்வு காணப்படாமல் நிலுவையாக இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் நீதியானதும் நியாயமானதுமான இணக்கப்பாட்டுக்கான பணியை முன்னெடுக்குமாறு புதுடில்லி, கொழும்புக்கு பதியத்தக்கவிதத்தில் அழுத்தமாகத் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
விவாதத்தில் பங்கேற்ற சகல எம்.பி.க்களும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலைமை தொடர்பாக ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்தனர். இந்தியா அனுப்பிய பணம், நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் செலவிடப்படவில்லை என்றும் எந்தவொரு பதிலளிக்கும் கடப்பாடும் இல்லையெனவும் சுட்டிக்காட்டிய இந்த எம்.பி.க்கள், இது தொடர்பாக அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினர். தி.மு.க. எம்.பி. ரி.ஆர்.பாலு, அ.தி.மு.க. எம்.பி. எம்.தம்பித்துரை ஆகிய இருவரும் இப்பிரச்சினையை எழுப்பிய முக்கியமான உறுப்பினர்களாவர்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விடயத்தை எழுப்பியிருந்ததாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா, 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்தியாஇலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை இலங்கை பாராளுமன்றம் மேற்கொண்டதாகவும் அந்த 13 ஆவது திருத்தத்தை மேலும் கட்டியெழுப்புவது தொடர்பான விடயங்களில் தாங்கள் இலங்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் விபரித்திருக்கிறார்.
13 ஆவது திருத்த வீச்சுக்குள்ளும் அதற்கு அப்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாடே அமுல்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையிலேயே இலங்கையில் சமாதானமும் குழப்பமின்மையும் நிலைபெற முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.அதேசமயம் இலங்கைத் தமிழர்களும் இடம்பெயர்ந்த மக்களும் எதிர்கொள்ளும் நிலைவரத்தை ஆராய்வதற்காக இந்த மாத இறுதியில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கு முன்பாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி இலங்கைக்குச் செல்லவிருப்பதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

No comments: